ஞாயிறு, 24 ஜூலை, 2011

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (3) வெள்ளைக்காரர்களை அண்டிப் பிழைத்த கூட்டம் எது?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கலி.பூங்குன்றன்
இந்தியாவின் சுதந்திரத்துக்காக காங்கிரஸ் பாடு பட்டதாகவும், ஆனால் அதற்கு மாறாக ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கட்டளைப்படி நீதிக்கட்சி தொடங்கப் பட்டது என்றும் அவதூறு செய்கிறார் துக்ளக் கில் திரு.கே.சி. லட்சுமி நாராயணன்.

இதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. எதற்கெடுத்தாலும் ம.பொ.சி.யைத்தானே சாட்சிக்கு அழைக்கிறார்கள்? அவர் எழுதிய விடுதலைப் போரில் தமிழகம் என்ற நூலைத்தானே என்ற சாட்சிக்குக் கூப்பிடுகின்றனர்?

அந்த ம.பொ.சி.யே அந்த நூலிலே என்ன எழுதுகிறார்? அவர்கள் கொண்டு வந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்து, அவர்களைத் தாக்குவது தானே சுவாரசியமானது.

காங்கிரசைத் தோற்றுவித்தவனே ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் என்ற வெள்ளைக்காரன்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

முதல் மாநாடு 1885 டிசம்பர் 28,29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை யின் முதல் மாநாட்டை ஹ்யூம் கூட்டினார். அதற்காக விடுத்த சுற்றறிக்கையில், வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மாநிலங்களிலிருந்து ஆங்கில மொழியில் ஞானமுள்ள அரசியல் பிரமுகர்களைக் கொண்ட தாக மாநாடு இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், இந்திய தேசியத்தின் பெயரால் முதன் முதலாக ஒரு மாநாடு, இங்கிலீஷ்காரர் ஒருவரால், இங்கிலீஷ் படித்துப் பட்டம் பெற்ற வர்களைக் கொண்டதாகக் கூட்டப் பெற்றது. பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் மாநாடு நடந்தது என்று ம.பொ.சி. அதே நூலில் குறிப்பிட்டுள்ளாரே -இதற்கு என்ன பதில்?

வெள்ளைக்காரன் ஹ்யூமால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு ஓராண்டல்ல, ஈராண்டல்ல, 22 ஆண்டுகள் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார் அவர். அடுத்தடுத்து வெள்ளையர்கள் தலைமை வகித்தும் மகாசபை கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ராஜவாழ்த்துப் பாடப்பட்டதும், பிரிட்டீஷ் அரசுக்கு விசுவாசம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஹ்யூம் காலத்தில்தான்.

சுருக்கமாகச் சொன்னால் எவ்வித எதிர்ப்புமின்றி  படித்த இந்தியர்களுக்கு உயர் உத்தியோகங்களும் சலுகைகளும்  தேடித் தரும் ஸ்தாபனமாகக் காங்கிரஸ் செயல்பட்டது ஹ்யூம் சகாப்தத்திலேயே! இது ஒன்றும் அவர்களுக்குக் குறைபாடோ, குற்றமோ  அல்ல. காங்கிரசை அவர் தோற்றுவித்ததே இந்தக் காரியங்களுக்குத்தான். இவை எல்லாம் நமது சரக்கல்ல; அதே ம.பொ.சி. - அதே நூலில் காணக்கிடப்பவைதான்.

வெள்ளைக்காரனால் தொடங்கப்பட்டது
பதவிகளைப் பெறுவதற்காகத் தொடங்கப்பட்டது
அந்தப் பதவிகள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே! என் பதை இந்நூலில் ம.பொ.சி. வெளிப்படையாகவே கூறுகிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள் நீதிக் கட்சி வெள்ளைக்காரர்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது - பதவிகளைத் தேடி அலைந்தது என்று சொல்லுகிறார்கள் என்றால் அவர்களின் யோக்கியதையை எடை போட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும் ம.பொ.சி. எழுதுகிறார் கேளுங்கள், கேளுங்கள்.

சென்னையில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே பிரிட்டிஷ் அரசுக்கு வாழ்த்து பாடப்பட்டது. வெள்ளையரான சென்னை கவர்னர் கன்னிமரா விட மிருந்து வாழ்த்துச் செய்தியைப் பெற்று , அதை மிகுந்த பக்தி விசுவாசத்துடன் படித்த பிறகே நடவடிக்கை தொடங் கப்பட்டது. பிரிட்டிஷ் அரசியார், இந்தியாவின் சக்கரவர்த்தினியுமாகிய விக்டோரியாவுக்கு, அவர் அய்ம்பதாண்டு காலம் வெற்றிகரமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நடத்தியதற்காகப் பாராட்டு தெரிவித்து, அவரது ஆட்சி மேலும் நீடிக்க வேண்டும் எனவும் பிரார்த் தித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பெற்று, பேசியவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் ஆட்சியைப் புகழ்ந்தனர்.

(ம.பொ.சி. அதே நூல் பக்கம் 133,134)

வெள்ளையர்களுக்கு சாதாரண விசு வாசத்தோடு அல்ல; பக்தி விசவாசத்தோடு பிரார்த்தித்து வாழ்த்துப் பாடியதாக ம.பொ.சி. எழுதி இருக்கிறாரே. இதற்கு என்ன பதில் லட்சுமி நாராயணரே?

திருவாளர் கே.வி. லட்சுமி நாராயணன் துணைக் கழைத்த ம.பொ.சி.தான் பிறழ் சாட்சியாகிவிட்டார். அவாளின் சுதேசமித்திரனாவது அவாளுக்குத் துணை போகிறாதா என்று பார்க்கலாம்.

காங்கிரஸ் தோற்றமே
பிரிட்டிஷாருக்கு பல்லக்கு தூக்கவே


இதோ ஆதாரம்: 1855 ம் வருடம் டிசம் பர் 28 ஆம் தேதி பகல் 12 மணிக்கு காங் கிரஸ் மாநாடு துவங்கப்பட்டது.

வங்கத்துக் கீர்த்தி மிகுந்த பாரிஸ்டர் உமேசசந்திர பானர்ஜி அந்த சபையிலே அக்கிராசனம் வகிக்க வேண்டும் என்று ஏ.ஓ. ஹியூம் பிரேரணை செய்ய, அதை காசிநாத தெலங்கரும் நீதிபதி மணி அய்யரும் ஆமோதித்தனர்.

நம்மை பிரிட்டிஷ் ராஜ்யத்துக்கு விரோ தமாகச் சூழ்ச்சிகள் செய்யும் ராஜ விரோதிகளின் கூட்டம் என்று சில கனவான்கள் ஞானக் குறைவினால் சொல்லி விட்டார்கள். பிரிட்டன் அரசு நமக்கு அனுகூலமாக எவ் வளவோ காரியங்களைச் செய்தி ருக்கிறது. அதன் பொருட்டு அதற்கு நாம் நன்றி செலுத்துவோம். அய்ரோப்பாவில் உள்ள ஜனங்கள் ஆட்சி முறையைப்பற்றி எவ்வித மான கொள்கைகள் உடையாரோ அதே விதமான கொள்கைப்படி இங்கும் ஆட்சி நடத்த விரும்பு கிறோம். இந்த விருப்பத்துக்கும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தினிடமுள்ள பூர்ண விசுவாசத்திற்கும் விரோதமே யில்லை.

(1835_ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி நடைபெற்ற முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் உமேசசந்திர பானர்ஜி தலைமை வகித்துப் பேசியது.)

இங்கிலீஷ் ராஜ்யத்திடம் நாம் பூர்ணமான அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளை எல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதிய ஒளி பெற்றோம். ஆசியாவின் கொடுங் கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரீகத்தின் விடுதலை ஒளி நமக்குக் கிடைத்தது (கரகோஷம்)

- 1906 ம் வருடத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் தாதாபாய் நவ்ரோஜி தலைமை வகித்துப் பேசியது.

மகாராணியின் அனுகூலமான, என்றும் மறப்பரிய கீர்த்தி மிக்க ஆட்சியில் அய்ம்பது வருஷம் முடிவு பெற்றதைக் குறித்து சக்ரவர்த்தினி யிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகளைத் தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது அம்மகாராணி இன்னும் பல வருடம் ஆளவேண்டும் என்று வாழ்த்துகிறது.

- 1906 ம் வருடம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம்.

இந்த ஜனசபையை ஏற்படுத்தினோர் பிரிட்டிஷ் ராஜ்யத்திடம் மிகுந்த பற்றுதலுடையவர்கள். இதை விட்டு ருஷ்யாவினுடைய ஆட்சியின் கீழ்ப் புகுவதை அவர்கள் ஒரு நாளும் விரும்பமாட்டார்கள். இங்கி லீஷ் ராஜ்யம் நாகரீகமானது; ருஷ்ய ஆட்சியோ கொடுங் கோன்மை.

- 1889 டிசம்பர் 26 இல் பம்பாயில் நடைபெற்ற 5ஆவது காங்கிரஸ் மகா சபையில், வில்லியம் வெட்டர்பர்ன் என்ற ஆங்கிலேயர் தலைமை வகித்துப் பேசியது.

கருணை தங்கிய சக்கரவர்த்தினி யின் ஆட்சி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தின் சரித்திரத்தில் நீண்டதும், மிக உபகாரமானதும், மனித சந்தோஷத் தாலும், நாகரீகத்தாலும் மிக முக் கியமான அபிவிருத்திகளுடன் பிணைக்கப்பட்டது மாதலால், இந்த ஆட்சியில் அறுபதாண்டு முடிவு பெற்றமை கருதி அவருக்கு இந்த ஜன சபை வணக்கத்துடன் நன்றி தெரிவிக்கிறது.

- 1896ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடைபெற்ற 12 வது காங்கிரஸ் மகாசபையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம். சுதேசமித்திரன் வெளியிட்ட காங்கிரஸ் வரலாறு முதல் பாகத்திலிருந்து.

இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவைப்படாதே! வெள்ளைக்காரர் களிடம் வேலைகள் பெறுவதற்காக மனு போட்டு அவர்களுக்கு ராஜ வாழ்த்துப்பாடி மண்டியிட்டுக் கிடந்த பரம்பரையா பெரியார் இயக்கம் பற்றிப் புழுதி வாரித் தூற்றுவது?

பெரியார் ஈரோட்டில் நடத்திய (10-5-1930) இளைஞர் மாநாட்டின் தீர்மானம் என்ன தெரியுமா?

எந்தப் பொதுக் கூட்டங்களிலும் ஆரம்பத்திலாவது, முடிவிலாவது ராஜவணக்கம், கடவுள் வணக்கம், தலைவர்கள் வணக்கம் ஆகியவைகள் செய்யும் காரியத்தை விட்டுவிட வேண்டும் என்று இம்மாநாடு தீர் மானிக்கிறது.

இந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வெத்து வேட்டு வாணங்களை விட்டு வேடிக்கை காட்ட ஆசைப்பட வேண்டாம் அக்ரஹாரமே என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.

சுதந்திரம் கேட்கவா காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

At that time was the foundation of the Indian National Congress laid not for Swaraj, nor Swadesh, no Swadhinta or Swadharma but for  few crumbs that may fall from the table of the British - whose power in India had been established on firm foundation.

அந்த நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் சுயராஜ்யத்திற்காகவோ, சுதேசிக்காகவோ, சுவாதீனத்திற்கா கவோ, சுயதர்மத்துக்காகவோ அமை யப் பட்டதல்ல. ஆனால் பிரிட்டி ஷார் மேஜையிலிருந்து விழுகிற எலும்புத் துண்டுகளுக்காகவும், அவர்களு(From sixty Years of Congress by Sajyapal and Praboth Chandra M.A.) போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

1885-இல் வெள்ளைக்காரரால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் பூர்ண சுதந்திரம் கேட்டது 1929 லாகூர் மாநாட்டில்தானே!

1916 இல் நீதிக்கட்சி தோற்றுவிக் கப்பட்டது. அதன் முதல் குறிக்கோள் பார்ப்பன ஆதிக்கப் பிடியிலிருந்து பார்ப்பனர் அல்லாதார் விடுதலை பெறுவதே அதுவும் காங்கிரஸ்காரராக இருந்த பிட்டி தியாகராயர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் டாக்டர் சி. நடே சனார் துணையோடு நீதிக் கட்சியை நிறுவினார்கள். 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறிய தந்தை பெரியர் 1932 டிசம்பரில் வெளியிட்ட சுயமரியாதை இயக்கத் தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும் என்பதில் முதல் திட்டமாகக் குறிப் பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா?

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித் தன்மை கொண்ட ஆட்சியிலிருந்து இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது என்று திட்டம் கொடுத்தவர் அல்லவா ஈரோட்டுச் சிங்கம்.

1942 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு (Quit India) தீர்மானத்தை நிறைவேற்றியது காங்கிரஸ்.

(பார்ப்பனர்களின் குலதர்ம வீரரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் எதிர்த்தார் - பின் வாங்கி னார். ஆகஸ்டு துரோகி என்று தூற் றப்பட்டார் என்பதையும் துக்ளக் கூட்டத்துக்கு இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.)

அதனைத் தொடர்ந்து தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. எங்கும் கலவரம், கொலை, கொள்ளை, தீ வைப்பு இத்தியாதி, இத்தியாதி!

காந்தியார் கைது செய்யப்பட்டார். பின் விடுதலையானார். வெளி வந்த வேகத்தில் அவசரம் அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

சட்டமறுப்பு ஆரம்பிக்கும் நோக் கம் எனக்கில்லை. முன் நிகழ்ந்தது இனி நிகழாது. 1942 ஆம் வருடத்து நிலைமைக்கு இனிமேல் இட்டுச் செல்லமாட்டேன். சிவில் நிர்வாகத் தில் உள்ள தேசிய சர்க்கார் போதும். (சுதேசமித்திரன் 14_-7_-1944) என்று கூறிடவில்லையா?

அதே நேரத்தில் தந்தை பெரியார் அவர்களை ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்.

இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண் டும்? என்று குடி அரசில் (29-12-1933) தலையங்கம் எழுதியதற்காக. வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் 124 ஆ. அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு (30-_12_1933) சிறையில் அடைக்கப் பட்டாரே. 

எதிர் வழக்குக் கூட ஆடாமல் வரலாற்று சிறப்பு மிக்க அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவர் அல்லவா பெரியார்? 9 மாத சிறைத் தண்டனை 300 ரூபாய் அபராதம். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதம் தண்டனை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தண்டனை அளித்ததே - சிரித்த முகத்துடன் தண்டனைகளை ஏற்றுச் சிறை சென்றவர் அல்லவா வெண்தாடி வேந்தர்? தந்தை பெரி யாரின் தங்கை எஸ்.ஆர்.கண்ணம் மாளும் தண்டனைக்குள்ளானாரே?

ஆச்சாரியார் போல அண்டர் கிரவுண்ட் ஆனாரா? அப்படி அண் டர் கிரவுண்ட் ஆனவருக்குத்தானே இந்தியாவின் முதல் கவர்னர் ஜென ரல் என்ற லாட்டரி பரிசு  அடித்தது _ பார்ப்பனர் சூழ்ச்சியாலும், ஆதிக்கத்தாலும்

துக்ளக் கூட்டமே! கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!
(இன்னும் இருக்கிறது)

பா.ஜ.க. தேர்தலில் நிற்க தகுதி உடையதுதானா?


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பாரதிய ஜனதா கட்சி ஆளும் கருநாடக மாநிலத் தில் பகவத் கீதை கட்டாய பாடமாக ஆக்கப் பட்டுள்ளது.

பகவத் கீதை என்பது இந்து மதத்தின் நூல். பிறப்பின் அடிப்படையிலானது - வருணம் - ஜாதி என்பது; அதனை நானே படைத்தேன் - படைத்தவன் நானாக இருந்தாலும் நானே நினைத்தாலும் அதனை மாற்றியமைக்க முடியாது என்று கீதாசிரியன் கிருஷ்ணன் சொல்லியிருப்பதாக பகவத் கீதை சொல்லுகிறது.

பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறிப் பெண்களை இழிவுபடுத்துகிறது.

இத்தகைய பிற்போக்கு நூலை மாணவர்களுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால், இதைவிட ஆபத்தானது வேறு ஒன்று இருக்க முடியுமா?

இளம் பிஞ்சுகள் மத்தியில் விகற்பத்தை, வேற்றுமையை, வெறுப்பை விதைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது!

பள்ளிகளுக்குப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்புவது அறிவை வளர்த்துக் கொள்ளவும் பண்பாடுகளைப் பழகிக் கொள்ளவும் தானே தவிர, ஜாதியின் பெயரால் ஒருவரை ஒருவர் பிரித்து வைத்து வெறுப்பை அறுவடை செய்வதற்கல்ல.

பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மதத்தின் வருணாசிரமம் மீதும், ஜாதியின்மீதும் அழுத்தமான நம்பிக்கை உடையதாகும்.

ஆர்.எஸ்.எஸின் தந்தை என்று கூறப்படும் கோல்வாக்கர் எழுதிய Bunch of Thoughtsஎன்பதுதான் ஆர்.எஸ்.எஸின் வேத நூலாகும்.

அதில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

வருணம் என்று கூறப்படுவது இழிவானது என்ற எண்ணம் நம் மக்களிடத்தில் நிலவுகிறது. அது ஒன்றும் ஏற்ற தாழ்வல்ல; மாறாக சமூக அமைப்பாகும். பிரித்தாளுவதற்காக வெள்ளைகாரர்கள்தான் தவறாகப் பிரச்சாரம் செய்தனர்.

பிராமணர்கள் அறிவுத்திறத்தால் உயர்ந்தவர்கள் சத்திரியர்கள் எதிரிகளை அழிப்பதில், சண்டைப் போடுவதில் வல்லமையுள்ளவர்கள். வைசியர்கள் என்பவர்கள் விவசாயம் மற்றும் வாணிபம் செய்யக் கூடியவர்கள்.

தங்கள் தொழிலைச் செய்வதன்மூலம் சமூகத்துக்குச் சேவை செய்பவர் சூத்திரர் - இது ஒன்றும் தவறான அமைப்பு முறையல்ல என்கிறது ஆர்.எஸ்.எஸின் வேதநூல்.

இந்தக் கொள்கையை செயல்படுத்துவதே பிஜேபி ஆட்சியின் நோக்கம். அதனைத்தான் கருநாடக மாநிலத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் பிஜேபி ஆட்சி நடக்கிறது. அங்கும் பகவத் கீதை சொல்லித் தரப்படுவதாக ஏற்கெனவே செய்தி வெளியானது.

அரசமைப்புச் சாசனத்துக்கு உண்மையாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துப் பதவிக்கு வருபவர்கள் அரசமைப்புச் சாசனத்துக்கு விரோதமாக இப்படி நடந்து கொண்டால், அத்தகைய அரசின்மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து நீதிமன்றங்கள் தெளிவாகத் தீர்ப்பை வழங்கிட வேண்டும்.

கருநாடக மாநிலத்தில் சிறுபான்மையினர் சம்மேளனம் நீதிமன்றம் சென்றுள்ளது - ஆளுந ரிடமும் புகார் மனு கொடுத்துள்ளது.

முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் என்று ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் - இந்து மதவாதிகள் அடம்பிடித்தனர் அது தோல்வியில் முடிந்தது.

சரஸ்வதி வந்தனா என்கிற கடவுள் வாழ்த்துப் பாடலை அறிமுகப்படுத்த முயன்றார். அப்பொழுது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி என்ற பி.ஜே.பி. பார்ப்பனர் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் அதனை அறிமுகப்படுத்தியபோது, தமிழ்நாட்டிலிருந்து அந்த மாநாட்டில் பங்கேற்ற கல்வி அமைச்சர் இனமானப் பேராசிரியர்  க. அன்பழகன் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்து வெளி நடப்பு செய்தார். அதன் காரணமாக அந்த முயற்சி கருவிலேயே சிதைக்கப்பட்டது.

ஆனாலும் பா.ஜ.க., தன் பார்ப்பனீயத்தைக் கைவிடக் கூடிய அமைப்பு அல்ல, மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடக்க முயலும் அந்த அரசியல் கட்சி அரசமைப்புச் சட்ட ரீதியில் தேர்தலில் போட்டியிடத் தகுதி உடையதுதானா என்பது குறித்துத் தீர்க்கமான முடிவு தேவை!

வியாழன், 21 ஜூலை, 2011

பொறியியல் கல்லூரியும் - மாணவர் சேர்க்கையும்


எழுத்துரு அளவு Larger Font Smaller Font
கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன் சிலிங்) நடைபெற்றுக் கொண்டு வருகிறது. கிட்டத் தட்ட 50 விழுக்காடு கலந்துரையாடல் முடியும் நிலையில் உள்ளது.

அதன்படி பார்த்தால் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், அருந்ததி பிரிவினருக்கான இடங்கள் அதிகம் காலியாக உள்ளன.

அருந்ததி பிரிவைச் சேர்ந்த 210 மாணவர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்த 17 ஆயிரத்து 928 மாணவர்களும், பழங்குடி (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 481 மாணவர்களும் விண்ணப்பித் திருந்தனர்.

இதில் அருந்ததி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இதுவரை 37 பேர்களும், தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்தோர் 492 பேர்களும், பழங்குடியினர் (எஸ்டி) பிரிவைச் சேர்ந்த 9 பேர்களும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இந்தப் பிரிவுக்கான பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பித்துள்ளவர்களில் 3 சதவிகித அளவுக்குக்கூட கல்லூரிகளில் சேர முன்வரவில்லை.

அதேநேரத்தில், முன்னேறிய பிரிவைச் சேர்ந்தவர் கள் போட்டியில், திறந்த போட்டியில் 7678 மாணவர்கள் இடங்களைப் பெற்றுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (30+20 சதவிகிதம்) அளவுக்கு மாணவர்கள் சேர வில்லையென்றாலும், கணிசமான அளவுக்குச் சேர்ந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 440, பிற்படுத்தப்பட்டோர் 4989, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 2677 மாணவர்கள் இடங்களைப் பெற்றுக் கொண்டுவிட்டனர்.

பொறியியல் கல்லூரிகளில் 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதிவரை கலந்தாய்வு நடைபெற இருப்பதால், மேலும் கொஞ்சம் முன்னேற்றம் காணப் படலாம் என்றாலும், இடங்கள் இருந்தும் தாழ்த்தப் பட்டோர் பொறியியல் கல்லூரிகளில் சேர முன்வராதது ஏன்? விண்ணப்பங்கள் அனுப்பிவிட்டு கலந்தாய் வுக்குக்கூட வராதது ஏன் என்பது குறித்து சிந்திக்கப்படவேண்டும்.

கல்லூரிகளில் சேர்வதற்கான பணம் இல்லாதது முதன்மையான காரணமாக இருக்க முடியும் - வெளியூர் மாணவர்களாக இருந்தால் விடுதிகளில் தங்கிப் படிக்கும் நிலையில் மேலும் பணம் தேவைப்படக் கூடும்.

இதுகுறித்து அரசு தக்கவர்களைக் கொண்டு ஆய்வு செய்து, விண்ணப்பித்தும் பொறியியல் கல் லூரிகளில் சேர முன்வராதவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவ்வளவுக்கும் தி.மு.க. ஆட்சியில் பட்டதாரி அல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கான கட்ட ணத்தை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக் கப்பட்டது - அது இப்பொழுதும் தொடரத்தான் செய்யும்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலை கவனிக்கப்படவேண்டும். பொறியியல் கல்லூரி யில் சேரவில்லை என்பதற்காக மட்டுமல்ல; இதே நிலை வேறு கல்லூரிகளில் சேரும் பிரச்சினையிலும் ஏற்படக்கூடும்.

பொருளாதாரம்தான் இடர்ப்பாடு என்றால், அதனைச் சரி செய்வதற்கு அரசு முன்வரவேண்டும். வங்கிகளில் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது என்றாலும், அதனைப் பெறுவதில் பல இடர்ப்பாடுகள் இருப்பதாகவே தெரிகிறது. அதுவும் கிராமங்களிலி ருந்துவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மேலும் பல சிக்கல்கள் இருப்பது கண்கூடு.

ஒரு காலகட்டத்தில் இடங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. இப்பொழுது இடங்கள் இருந்தாலும்,  சேர்வதில் இடர்ப்பாடுகள் இருப்பது ஆரோக்கியமானதல்ல. தடைகளை, இடையூறுகளை நீக்கிக் கல்வி கற்க முன்வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை அரவணைத்து. கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான திட்டங்களை அரசுகள் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பொருளாதாரம்தான் கல்லூரிகளில் சேருவதற்குத் தடையென்றால், இலவசமாகக் கூட கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கல்வி உரிமை மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு, இந்த உதவியைச் செய்வதுகூட சாதாரணமானதாகத் தான் இருக்க முடியும்.

தேவை புத்திசாலித் தனமான முடிவு



எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், சமச்சீர் கல்வி தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் ஒலி கேட்காமல் நிசப்தமாய் பொறுப்பான வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை இன்றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதாமல் ஏழையெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர் களுக்கும் கிடைத்த வரப் பிரசாதமாகக் கருத வேண்டும். வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியாளர் கணக்கிடாமல், எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசியல் நோக்கில் கருத்துக் கூற விரும்பியிருந்தால் எப்படி எப்படியோ சொல்லியிருக்கலாம் வெற்றி! வெற்றி!! தி.மு.க.வுக்கு இமாலய வெற்றி! அதிமுக அரசுக்கு நீதிமன்றம் சூடு! என்றெல்லாம் ஆர்ப்பரிக்கலாம்  - அவ்வாறெல்லாம் கூறாமல் இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் தி.மு.க.வின் தலைவர் கருத்துக் கூறியுள்ள நிலையில், இந்த அசாதாரண நிலையைத் தங்கள் ஆட்சிக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்வது தானே புத்திசாலித்தனம்!
பள்ளிகள் திறந்து 50 நாள்கள் பறந்தோடி விட்டன பிள்ளைகளும், பெற்றோர்களும் பதறுகின்றனர். காலாண்டுத் தேர்வு என்ற பேச்சுக்கே இடம் இல்லாமற் போய்விட்டது.
பத்தாம் வகுப்பு மாணவ - மாணவியர்க்கோ அரசுத் தேர்வு. இவர்களுக்கு 50 நாட்கள் கல்வி கற்பிக்கப்படாத காலமாக ஆன காரணத்தால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு யார் பொறுப்பு?
கல்வி தானே அடிப்படையில் செல்வம்? தமிழ்நாட்டில் கல்விப் பிரச்சினையை சரியாகக் கையாளாத ஆட்சிகள் காலாவதி ஆனதுதான் பழைய வரலாறு.
கொள்கையில் பிடிவாதமாக இருப்பது என்பது வேறு; தவறைச் செய்துவிட்டு, அந்தத் தவறிலிருந்து வெளியேறாமல் பிடிவாதமாக இருப்பது என்பது வேறு. இரண்டுப் பிடிவாதங்களும் ஒன்றல்ல.
தமிழக அரசு இரண்டாவது நிலையில் பிடிவாதமாக இருப்பதாகத் தெரிகிறது - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மேலே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதன் மூலம் இது தெளிவாகவே தெரிகிறது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும், மேல் முறையீடு வேண்டவே வேண்டாம்; சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று இவ்வாண்டே சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றுகேட்டுக் கொண்டுள்ளன.
அ.தி.மு.க. அரசின் இந்தப் பிடிவாதத்துக்கு ஒரே ஒரு ஆசாமி மட்டும்தான்  பச்சைக் கொடி காட்டுவார் - அவர்தான் திருவாளர் சோராமசாமி; அவருக்கும் தமிழ்நாட்டு வெகு மக்களுக்கும் என்ன சம்பந்தம்? குறிப்பிட்ட ஒரு வருணத்தாருக்கு மட்டும் வழிகாட்டும் ஆசாமியாக அவர் இருந்துவிட்டுப் போகட்டும்!
பெரும்பாலான மக்களின் முக்கியமான பிரச்சினை யான கல்வியில் அ.தி.மு.க. அரசுக்கு அக்கறையில்லை என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டால் (அனேகமாக ஏற்பட்டு விட்டது) அது இவ்வாட்சிக்கு நல்லதாகுமா?
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர் களும் எப்படியெல்லாம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அ.தி.மு.க. அரசு அறியவில்லையா?
ஊடகங்கள் எல்லாம்கூட பெரும்பாலும் எந்தக் கருத்துகளைக் கொண்டுள்ளன என்பதைக்கூட இவ்வரசு அறியமாட்டாதா?
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை அனுமதிக்குமா ஏற்றுக்கொள்ளுமா என்பதே கேள்விக்குறிதான்.
அப்படியே ஏற்றுக் கொண்டு வழக்கை நடத்த ஆரம்பிப்பதாகவே வைத்துக் கொள்வோம்.
அதற்கும் சில நாட்கள் தேவைப்படுமே! இப்படியே இன்னும் எத்தனை நாட்களுக்குப் பள்ளிக் கூடங்களைச் செயல்படாமல் முடக்குவது?
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் அதற்கு அடுத்த கட்டம் என்ன? வேறு வழியின்றி சமச்சீர்க் கல்வித் திட்டத்தை அமல்படுத்தித்தானே தீர வேண்டும். அந்த நிலை மேலும் அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டுக்குக் கரும்புள்ளி யாகாதா?
தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றவை அத்தனையிலும் கை வைத்தே தீருவது என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் நிலைப்பாடு என்ற கருத்தை இந்தக் குறுகிய கால கட்டத்துக்குள்ளேயே அ.தி.மு.க. அரசு நிறையவே சம்பாதித்துக் கொண்டு விட்டது.
மக்களுக்குச் சம்பந்தம் உள்ளவர்கள் கூறும் கருத்தைக் கேட்பதுதான் புத்திசாலித்தனமே தவிர, வெகு ஜன விரோதிகளின் வார்த்தைகளைக் கேட்டு வீணாக வேண்டாம் என்பதே நமது பொறுப்பான வேண்டுகோள்!